Skip to main content

போரூர் ஏரியின் அவலம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பன்தாங்கல்  ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களும், லட்சக்கணக்கான மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள போரூர் ஏரி, சென்னை பெருநகருக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கு கிறது. கடந்த சில ஆண்டுகளாக அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்ட போதிய இடவசதி மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்காமல் இருந்தமையால் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவு பொருட்களை ஏரியில் கொட்டி எரித்து வருகிறது. தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன்,  போரூர் ஏரி இப்போது குப்பை கிடங்காக மாறிவருகிறது. தண்ணீரும் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் போரூர் ஏரியின் கரையோரம் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. பயங்கர துர்நாற்றமும் வீசுகிறது. அய்யப்பன்தாங்கல் ஊராட்சியே குப்பை கழிவுகளை ஏரியில் கொட்டி வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போரூர் ஏரியில் 6 ஆழ்துணை கிணறுகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் கொள்ளளவு 46 மில்லியன் கன அடி. கடந்த  2015ம் ஆண்டு இந்த ஏரியில் சுமார் 70 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க கூடிய அளவுக்கு ஆழப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏரிக் கரைகளில் மண் அரிப்பு  ஏற்படாமல் இருக்க ஏரியை சுற்றி சுமார் 3 கி.மீட்டர் சுற்றளவுக்கு ரூ.16 கோடியில்  கல் பதிக்கப்பட்டது. மேலும், ஏரி முழுவதும் தூர்வாரப்பட்டு, பாதுகாப்புக்காக  முள்வேலியும் அமைக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், கொட்டப்பட்ட குப்பையை அகற்றவும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஏரியில் போதிய பராமரிப்பு  இல்லாததால் சென்னை மக்களுக்கு வழங்கும் குடிநீர் மாசடைந்து வருகிறது. எனவே, ஏரி மற்றும் கரைகளில் அய்யப்பன்தாங்கல் ஊராட்சியின் மூலம் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை அகற்றி, ஏரி  மாசடையாமல் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நீர் ஆதாரம் பாதுகாப்பு கருதி இனி வரும் காலங்களில் ஊராட்சியின் மூலம் கொட்டப்படும் குப்பை கழிவு களை ஏரியில் கொட்டி எரிக்காமல் இருக்க உத்தரவு பிறப்பித்து குப்பை கழிவு பொருட்களை கொட்ட மாற்று இடம் ஏற்படுத்தி தருமாறு எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் மீது கொண்ட அக்கறையால் சமூக ஆர்வம் கொண்டு வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு.

G.வீரபாகு,

சமூக ஆர்வலர்,




Comments